Saturday, November 07, 2009

கற்பனை

ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரமதிகம்
பள்ளி வகுப்பறையில் ஐயா சொன்னார்
அறவே இல்லை என்று சொன்னது
சுவற்றில் தொங்கிய அழகிய நாள்காட்டி

வெண்மைக்கும் கருமைக்கும் பூசலென்றார்
ஆப்பிரிக்காவிலும் அமெரிக்காவிலும்
ஒட்டிப்பிறந்த இரட்டையர் என்றன
பாடம் சொன்னவர் விழிகளிரண்டும்

இலைகளின் நிறமோ பச்சை என்றார்
இல்லை என்றன செந்நிற இலைகள்
இலையுதிர் காலத்தில் இங்கிலாந்து தேசத்தில்
பாடப் புத்தகத்தின் பதினைந்தாம் பக்கத்தில்

இயற்கையினும் பரந்த ஒன்று
இல்லை அவன் படைப்பில் என்றார்
இறவாத இயற்கையும் தனக்குமுன் தூசென்று
விஸ்வரூபம் கொண்டது கவிஞனவன் கற்பனை

Labels: ,

0 Comments:

Post a Comment

<< Home