Friday, April 05, 2013

நிருபமா


நிருபமா...

வந்தாய் என் வாழ்வில் பெரும் திருப்பமாய் 
இனி நீயே என் கவிகளுக்குக் கருவம்மா 
சின்னஞ்சிறு பொன் மின்னும் உருவமாய்  
இனி உலகத்தோர் உள்ளத்தை கவரம்மா 

கண்ணே நீ சிரிக்கின்ற சிற்பமா? 
இல்லை ஏழுலகின் ஒட்டுமொத்த விருப்பமா? 
அழுதிடினும் ஏது உன்மேல் வெறுப்பம்மா? 
உன்னைக் கண்போல காப்பது என் பொறுப்பம்மா 

Wednesday, June 23, 2010

இதுவும் இல்லமே

நாற்காலியில் அமர்ந்தபடி நான்
நாளிதழைப் புரட்டியிருக்க
நாலுமாத பிள்ளைபோல் நீ
நாலும் மறந்து உறக்கத்திலே...

ஒரு கூரையின் கீழ் குடியேற நாம்
பட்ட பாடு தான் ஒன்றா இரண்டா?
ஐம்பது ஆண்டு நீளமுடையது நம் உறவு
ஐந்தாறு வரிகளில் சொல்லிவிட முடியாது

இருபதாம் வயதினிலே இளசாய் ஒரு காதல்
இருபதாம் நூற்றாண்டிலும் இடையூறாய் பெற்றோர்
இடம்பெயர்ந்து இல்லம் அமைக்க விழைந்தோம்
இனிதே இணையத்தான் முடிந்ததா நம்மால்?

உனக்கொரு கணவனென்றும் எனக்கொரு மனைவியென்றும்
உனக்கொரு மகளென்றும் எனக்கொரு மகனென்றும்
வாழ்க்கைப் பாதைகள் இருவேறு திசையில் செல்ல
வாழ்வின் அர்த்தத்தை தொலைத்து நின்ற அவலமது

நமக்கு முன்வந்த சந்ததி நம்மைப் பிரித்து வைத்தது
நமக்கு அடுத்துவந்த சந்ததி நம்மைச் சேர்த்து வைத்தது!
கணவன் இழந்த நீயும் மனைவி இழந்த நானும்
கடைசி நாட்களைச் சேர்ந்தே கழிப்போம்!

வாசலில் கேட்கிறது ஆட்டோவின் சத்தம்
வருவது யாரென்று யூகிக்க நினைக்கிறேன்
மூன்று பிள்ளைகள் ஈன்ற பொழுது பெரிதுவத்து
இன்று போக்கிடமின்றித் திரியும் மூதாட்டியோ?

Labels: , ,

Thursday, June 10, 2010

தாசனின் தாசி

அவன் சொல்கிறான் என்னிடம்...

அழகுக்கோர் இலக்கணம்
ஆருயிரின் திருமுகம்
இதழ் சிந்தும் மந்தகாசம்
ஈர்த்திழுக்கும் ஒரு காந்தம்

உறங்காது பேசிடும் மான்விழி
ஊடல் மறந்த காதல் மொழி
எழில் மேனிக்கிணை சொல்ல
ஏழுலகில் எவளுமல்ல

...பார்வதிக்குப் புகழாரம் சூட்டுகிறான் அவன்
கண்ணீரை மடை தாண்ட விடாமல் மடக்கி
மனமாரக் கேட்கின்ற இவள் சந்திரமுகி.

Labels: ,

Friday, May 28, 2010

ம் என்றால் உள்ளதடி சொர்க்கம்...


வீடெல்லாம் சுகந்த வாசம்
பூக்களங்கே சந்தனமிங்கே
ஊதுபத்தியின் நறுமணமோ
படர்ந்திருந்தது ஆங்காங்கே

ஆரவாரப் பேச்சுகளும்
ஆர்ப்பரிக்கும் உறவுகளும்
ஆட்டம் போட்டபடியாய்
ஆசைக் குழந்தைகளும்

தலையெல்லாம் தானாக
அவள்பக்கம் திரும்பிக்கொள்ள
அழகான தேவதையாய்
என்னவள் அதோ அங்கே!

உள்ளங்கையின் உள்ளுக்குள்ளே
பொக்கிஷமாய் அது!
காலம் காலமாய்
நானவளைக் கேட்டது!

நெருங்கி எந்தன் அருகில் வந்து
நெஞ்சின் மேல் அதனை வைத்து
நெற்றியிலே முத்தமிட்டு
நெகிழ வைத்தாள் அனைவரையும்

இருக்கையிலே இல்லையென்றாள்
இறந்திருக்க இதோவென்றாள் - அவள்
இமையைக் கண்ணீர் கடக்க - என்
இமைகள் மூடி மறைந்தாள்.

Labels: , , ,

Friday, May 21, 2010

கவிஞனின் மறுபிறப்பு


ஏங்கித் தவித்த காதலனாய்
தேங்கிக் கிடந்த வலியதனை
போக்க எண்ணிக் கவிபாடி
ஊக்கம் தந்த விசிறிகளால்
ஊற்றென வார்த்தைகள் பொங்கிப்பாய
நூற்றுக் கணக்கில் கவி புனைந்தேன்

அலைபாய்ந்து வானொலியில்
வந்ததென் பாடல்
தொலைக்காட்சிப் பெட்டியிலும் ஒலித்ததென் பாடல்
காதலதன் சோகத்தைப் பாட்டெழுத
ஞாலமதில் நானொருவன் தானுண்டாம்
இரகசியமாய்ச் சொல்லத் தேவையில்லை
இரசிகர்கள் கோடானு கோடியென்று

மை நிரப்பியாயிற்று
தாள்களும் மேஜையின்மேல்
எட்டு வருடம் காத்திருந்தும்
மொட்டு விடாத காதலொன்றை
மெட்டுக்கு ஏற்றார்போல
பாட்டாக்கித் தரவேண்டும்

வார்த்தைகளின் ஊற்றெங்கே?
நெஞ்சடைக்கும் சோகமெங்கே?
இயக்குநருக்குத் தெரிந்திருக்காது
நேற்று நீ சொன்ன வார்த்தை
ஊக்கம் தந்தவள் நீதான், இரசிகரில்லை
ஏக்கம் சொல்லும் கவிதையும் இனியில்லை

Labels:

Tuesday, May 11, 2010

இழந்ததும் உணர்ந்ததும்

காதலைக் கண்டிராத மானிடா!- நீ

எதனை இழக்கிறாய் என்பதறியாய்
தெரிந்துகொள்ள நாட்டமிருப்பின்
காதலில் உள்ளவனைக் கேள்
தெரியாதது இல்லையென்றாகக்
காதலைக் கொன்றவனைக் கேள்

Labels: ,

Sunday, March 07, 2010

அரக்கன்

நிலம் போல் பொறுத்தவளைக் கழிவு
ஜலம் போல் நடத்தியதும் அவள்
உளம் மேல் மிதித்தழுத்திக் காயத்
தடங்கள் பதித்ததுவும்...

கிளி போல் பறந்தவளைக் கூண்டுக்
கிளி போல் அடைத்ததுவும் ஆடும்
மயில் போல் இருந்தவளின் உலகை
ஜெயில் போல் மாற்றியதும்...

காதல் எனும் பேர் சொல்லி அவளைக்
காவல் தனில் தான் தள்ளி உயிராய்க்
காதல் செய்த காரிகையை நம்பிச்
சாகச் செய்த பேரரக்கன்...

Labels: ,