Wednesday, June 23, 2010

இதுவும் இல்லமே

நாற்காலியில் அமர்ந்தபடி நான்
நாளிதழைப் புரட்டியிருக்க
நாலுமாத பிள்ளைபோல் நீ
நாலும் மறந்து உறக்கத்திலே...

ஒரு கூரையின் கீழ் குடியேற நாம்
பட்ட பாடு தான் ஒன்றா இரண்டா?
ஐம்பது ஆண்டு நீளமுடையது நம் உறவு
ஐந்தாறு வரிகளில் சொல்லிவிட முடியாது

இருபதாம் வயதினிலே இளசாய் ஒரு காதல்
இருபதாம் நூற்றாண்டிலும் இடையூறாய் பெற்றோர்
இடம்பெயர்ந்து இல்லம் அமைக்க விழைந்தோம்
இனிதே இணையத்தான் முடிந்ததா நம்மால்?

உனக்கொரு கணவனென்றும் எனக்கொரு மனைவியென்றும்
உனக்கொரு மகளென்றும் எனக்கொரு மகனென்றும்
வாழ்க்கைப் பாதைகள் இருவேறு திசையில் செல்ல
வாழ்வின் அர்த்தத்தை தொலைத்து நின்ற அவலமது

நமக்கு முன்வந்த சந்ததி நம்மைப் பிரித்து வைத்தது
நமக்கு அடுத்துவந்த சந்ததி நம்மைச் சேர்த்து வைத்தது!
கணவன் இழந்த நீயும் மனைவி இழந்த நானும்
கடைசி நாட்களைச் சேர்ந்தே கழிப்போம்!

வாசலில் கேட்கிறது ஆட்டோவின் சத்தம்
வருவது யாரென்று யூகிக்க நினைக்கிறேன்
மூன்று பிள்ளைகள் ஈன்ற பொழுது பெரிதுவத்து
இன்று போக்கிடமின்றித் திரியும் மூதாட்டியோ?

Labels: , ,

Thursday, June 10, 2010

தாசனின் தாசி

அவன் சொல்கிறான் என்னிடம்...

அழகுக்கோர் இலக்கணம்
ஆருயிரின் திருமுகம்
இதழ் சிந்தும் மந்தகாசம்
ஈர்த்திழுக்கும் ஒரு காந்தம்

உறங்காது பேசிடும் மான்விழி
ஊடல் மறந்த காதல் மொழி
எழில் மேனிக்கிணை சொல்ல
ஏழுலகில் எவளுமல்ல

...பார்வதிக்குப் புகழாரம் சூட்டுகிறான் அவன்
கண்ணீரை மடை தாண்ட விடாமல் மடக்கி
மனமாரக் கேட்கின்ற இவள் சந்திரமுகி.

Labels: ,