Tuesday, November 24, 2009

விடைகொடு பூமித்தாயே

மனிதனற்ற உலகிற்கும் உயிர்தான் உண்டோ?
உண்டு...

மனிதனற்ற உலகிற்கும் உயிர்தருவோர் அன்றோ? - நாம்
நிலவினையும் பெண்ணாகப் பார்த்தவர் அன்றோ?

எனினும்...
உலகழியும் நாளொன்று வருமாயின் - வெள்ளை
நிலவிலேனும் மனிதனவன் உலவ வேண்டும் - எரியும்
பூமித்தாயைப் பெண்ணென்று கவிபாட

ஆதலால்...
இன்றே நிலவுக்கு அனுப்பி வைப்போம்
என்னோடு துணையாய் ஓர் பெண்ணழகை

Labels: ,

Tuesday, November 10, 2009

நாம் இருவர்


உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே.

உன்னோடு நானில்லா ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையினை மலர்தூவி அழைத்திடுதே.

Labels: ,

Saturday, November 07, 2009

கற்பனை

ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரமதிகம்
பள்ளி வகுப்பறையில் ஐயா சொன்னார்
அறவே இல்லை என்று சொன்னது
சுவற்றில் தொங்கிய அழகிய நாள்காட்டி

வெண்மைக்கும் கருமைக்கும் பூசலென்றார்
ஆப்பிரிக்காவிலும் அமெரிக்காவிலும்
ஒட்டிப்பிறந்த இரட்டையர் என்றன
பாடம் சொன்னவர் விழிகளிரண்டும்

இலைகளின் நிறமோ பச்சை என்றார்
இல்லை என்றன செந்நிற இலைகள்
இலையுதிர் காலத்தில் இங்கிலாந்து தேசத்தில்
பாடப் புத்தகத்தின் பதினைந்தாம் பக்கத்தில்

இயற்கையினும் பரந்த ஒன்று
இல்லை அவன் படைப்பில் என்றார்
இறவாத இயற்கையும் தனக்குமுன் தூசென்று
விஸ்வரூபம் கொண்டது கவிஞனவன் கற்பனை

Labels: ,

Wednesday, November 04, 2009

உவகை தந்த உவமை

நூற்றுக்கணக்கில் கவியெழுதி ஆயிற்று
ஒற்றை உவமை சொந்தத்தில் தோன்றவில்லை

நிலவைப்போல் தேய்கிறாள் என்றேன்
மலரைப்போல் மணக்கிறாள் என்றேன்
ரோஜாப்பூ இதழ்கள் என்றேன்
மத்தாப்புச் சிரிப்பு என்றேன்

ஆயிரம் கவிகள் பல்லாயிரம் தடவை
சொல்லி அலுத்த உவமைகள் அன்றோ?

முதன்முதற் சந்திப்பில் என்னையே நான் மறந்து
சுயமான உவமையொன்றும் தோன்றாக் கவிபோல
இமைக்காமல் வாய்பிளந்து நின்றிருந்த அத்தருணம்
இப்போது நினைவுக்கு வருவதும் தான் ஏனோ?

Labels: ,

Sunday, November 01, 2009

அழகுத்தாய் வாழ்த்து!

மரம் மலை நிலம் அலை
கடல் நதி கதிர் மதி
இயற்கையின் வளம் உணர்ந்து
இயற்றினேன் கவி புனைந்து

அத்துடன் நான் நிற்கவில்லை
என் திறனும் குன்றவில்லை

பாரதிக்கு ஒரு கவிதை
ஏழைப் பாமரனுக்கு ஒரு கவிதை
படைத்தவனுக்கொரு கவிதை
ஈன்று எடுத்தவளுக்கொரு கவிதை

இளமைக்கு ஒரு கவிதை
சிலர் மடமைக்கு ஒரு கவிதை
மண்ணுக்கு ஒரு கவிதை
முறைப் பெண்ணுக்கு ஒரு கவிதை

இத்தனையும் எழுதிவிட்டேன்
உனைமட்டும் மறந்துவிட்டேன்

பதினெட்டாம் அகவையில் பிடித்ததென்னை பித்து
இன்று உன் வயதோ நிற்கிறததை இரட்டித்து
உன் வயது மட்டும் இரட்டிக்கவில்லை
உன் மீது நான் கொண்ட நேசமும் தான்

அழகின் அகாராதியே
வாழிய நீ பல்லாண்டு!

Labels: ,